செய்திகள்

பாகிஸ்தான் வந்த நவாஸ் ஷரிப்,மரியம் நவாஸ் லாகூர் விமான நிலையத்தில் கைது

Published On 2018-07-13 16:27 GMT   |   Update On 2018-07-13 16:32 GMT
ஊழல் வழக்கில் குற்றவாளிகள் என நிரூபனமாகி தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோரை போலீசார் இன்றிரவு கைது செய்தனர்.#NawazSharif
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பிரதமராக இருந்து வந்த நவாஸ் ஷரிப், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு இதே ஜூலை மாதம் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் பிரதமர் பதவியையும் இழந்தார்.

அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தவும் சுப்ரீம் கோர்ட்டு அப்போது உத்தரவிட்டது.

இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷரிப் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ‘அவென்பீல்டு’ வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், நவாஸ் ஷரிப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என அந்த கோர்ட்டு முடிவு செய்தது.

அதைத் தொடர்ந்து நவாஸ் ஷரிப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டும் சிறை தண்டனை விதித்து கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கிடையே, லண்டன் நகரில் புற்றுநோயால் அவதியுற்று வருகிற மனைவி குல்சூம் நவாசை சந்திப்பதற்காக நவாஸ் ஷரிப் மகள் மரியம் நவாசுடன் அங்கு சென்றார்.

அங்கு குல்சூம் நவாஸ் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நவாஸ் ஷரிப், மகள் மரியம் நவாசுடன் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு பாகிஸ்தான் திரும்புவதாக தகவல்கள் வெளியாகின.



லண்டனில் இருந்து அபுதாபி சென்ற நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் அங்கிருந்து விமானம் மூலம் பாகிஸ்தான் புறப்பட்டு வந்துகொண்டிருப்பதாக தெரியவந்தது.

இதற்கிடையே லாகூர் அல்லது இஸ்லாமாபாத்தில் விமானத்தில் வந்து இறங்கியதும் நவாஸ் ஷரிப்பையும், மகள் மரியம் நவாசையும் கைது செய்ய தேசிய பொறுப்புடைமை முகமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவர்களை கைது செய்து ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவாஸ் ஷரிபை வரவேற்பதற்காக ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிய வண்ணம், நவாஸ் ஷரிபை வரவேற்பதற்காக லாகூர் விமான நிலையம் அருகே குவிந்துள்ளனர்.



அசம்பாவிதத்தை தவிர்ப்பதற்காக லாகூர் விமான நிலையம் மற்றும் லாகூர் நகரின் பல பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாருடன் சேர்ந்து ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையைச் சேர்ந்த வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மாலை 6.15 மணியளவில் அபுதாபியில் இருந்து நவாஸ் ஷரிப் வரும் விமானம் லாகூர் வந்தடையும் என முன்னர் தகவல் வெளியானது. ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்கு விமானம் வராததால் நவாஸ் ஷரிபை வரவேற்க காத்திருந்த தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று இரவு சுமார் 9.15 மணியளவில் நவாஸ் ஷரிப் வந்த விமானம் லாகூர் விமான நிலையத்தில் வந்தடைந்தது. விமானத்தில் இருந்து இறங்கி வந்த நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஷரிப் ஆகியோரை கைது செய்த அதிகாரிகள் பாதுகாப்பு படையினர் சூழ, சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். #NawazSharif
Tags:    

Similar News