செய்திகள்

தேர்தல் வெற்றிக்காகவே என்னை இந்தியா கொண்டு வர விரும்புகின்றனர் - விஜய் மல்லையா

Published On 2018-07-09 18:58 GMT   |   Update On 2018-07-09 18:58 GMT
தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே தன்னை இந்தியாவுக்கு திரும்ப அழைத்துவர மத்திய அரசு விரும்புவதாக விஜய் மல்லையா கூறினார். #VijayMallya
சில்வர்ஸ்டோன்:

இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

இது தொடர்பான வழக்கில் வாதங்களை எடுத்துவைப்பதற்கான இறுதி நாளாக வருகிற 31-ந் தேதியை கோர்ட்டு நிர்ணயித்து இருக்கிறது. அதைத் தொடர்ந்து அப்பீல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்து செப்டம்பர் தொடக்கத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லண்டனில் நடைபெற்ற ‘பார்முலா ஒன்’ கார் பந்தயத்துக்கு வந்த மல்லையா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் எப்போதும் இங்கிலாந்து வாழ் இந்தியர்தான். இந்தியாவில் வசிப்பது இல்லை. அப்படியிருக்க நான் தப்பி ஓடியதாக எப்படி கூற முடியும்? எங்கு நான் திரும்பி போக வேண்டும்? இவை எல்லாம் வெறும் அரசியல்தான்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், என்னை திரும்ப அழைத்து வந்து, புனித சிலுவையில் தொங்கவிட்டு அதன்மூலம் வாக்குகளை பெறலாம் என அவர்கள் (மத்திய அரசு) நம்புவதாக நினைக்கிறேன். அதற்காகவே என்னை இந்தியா கொண்டு செல்ல விரும்புகின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள எனது சொத்துகளை பறிமுதல் செய்யும் விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன். ஆனால் இங்கு எனக்கு அதிக சொத்துகள் இல்லை. எனது குடும்பத்தினர் பெயரிலேயே சொத்துகள் உள்ளன.

நான் தங்கியிருக்கும் வீடு எனது குழந்தைகளுக்கும், லண்டனில் உள்ள ஒரு வீடு எனது தாய்க்கும் சொந்தமானவை. அவற்றை யாரும் தொட முடியாது. ஒருசில கார்கள், சிறிதளவு நகைகள் மட்டுமே எனக்கு சொந்தமாக உள்ளன.

அவற்றை பறிமுதல் செய்வதற்காக நீங்கள் எனது வீட்டுக்கு வர வேண்டாம். நானே நேரடியாக அவற்றை ஒப்படைக்கலாம். அதற்கான நேரமும், இடமும் சொன்னால் போதும்.

இங்குள்ள சொத்துகள் தொடர்பாக லண்டன் கோர்ட்டில் நான் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளேன். அவற்றில் கூறியுள்ளதுபோல எனது பெயரில் உள்ள சொத்துகளை எடுக்க மட்டுமே அவர்களுக்கு உரிமை உண்டு. அதைத் தாண்டி அவர்களால் ஒரு அடியும் முன்னே செல்ல முடியாது.

மொனாக்கோ மற்றும் அபுதாபியில் பந்தயங்களில் ஈடுபடுத்தி வந்த படகு ஒன்று, ஊழியர்களுக்கான சம்பள பிரச்சினை விவகாரத்தில் சமீபத்தில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. அது எனது பிரச்சினை இல்லை.

இவ்வாறு விஜய் மல்லையா கூறினார்.  #Tamilnews 
Tags:    

Similar News