செய்திகள்

கைலாஷ் யாத்திரை சென்று நேபாளில் சிக்கி பரிதவித்த இந்தியர்கள் 96 பேர் பத்திரமாக மீட்பு

Published On 2018-07-04 04:11 GMT   |   Update On 2018-07-04 04:11 GMT
மோசமான வானிலை காரணமாக நேபாளத்தில் பரிதவிக்கும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற இந்திய பக்தர்கள் 96 பேர் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். #MansarovarYatra
காத்மாண்டு:

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற பக்தர்கள் 1,500 பேர் நேபாளத்திலும், சீனாவின் திபெத்திய பகுதியிலும் மோசமான வானிலை காரணமாக பரிதவித்து வருகின்றனர்.

மழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு சிக்கித்தவிக்கும் பயணிகளை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 7 சிறிய ரக விமானங்களை அந்நாட்டு அரசு அனுப்பிவைத்தது. சிமிகோட் மற்றும் ஹில்சா பகுதிகளில் இருந்து 143 இந்திய பக்தர்கள் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தீனதயாளன் என்பவர் உள்பட 19 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதற்காக 7 சரக்கு விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கர்னாலி மாகாணத்தில் அமைந்துள்ள சர்கெட் எனும் பகுதியில் சிக்கித்தவித்த 96 இந்திய பக்தர்கள் இன்று மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  #MansarovarYatra 
Tags:    

Similar News