செய்திகள்

இங்கிலாந்தில் பரவி வரும் காட்டுத் தீ- பொதுமக்கள் வெளியேற்றம்

Published On 2018-06-27 10:34 GMT   |   Update On 2018-06-27 10:34 GMT
வடக்கு இங்கிலாந்தில் காட்டுத் தீ பரவி வருவதால் அப்பகுதியைச் சுற்றி வசிக்கும் ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
லண்டன்:

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகர் அருகே காட்டுத் தீ பரவி வருகிறது. கடும் வெப்பநிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமையன்று டவ்ஸ்டோன்ஸ் நீர்த்தேக்கம் அருகே தீப்பிடித்து, பின்னர் அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவியது. சுமார் 6 கிமீ தொலைவுக்கு தீ பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. 10 தீயணைப்பு வாகனங்களில் சென்றுள்ள 50 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டு தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். 

இது ஒருபுறமிருக்க, காட்டு தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 34 வீடுகளில் வசித்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

காட்டுத் தீயினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும், கரும்புகை காரணமாக பாதிப்பு ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் ஜன்னல் கதவுகளை மூடி வைக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இன்று அப்பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News