செய்திகள்

பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமராவார்: மு‌ஷரப் நம்பிக்கை

Published On 2018-06-17 11:18 GMT   |   Update On 2018-06-17 11:18 GMT
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமராவார் என்று மு‌ஷரப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Musharraf #ImranKhan #pakistanelection

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் மு‌ஷரப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக்-,இ- இன்சாப் கட்சி தலைவரான இம்ரான்கான் வெற்றி பெறுவார்.

எனவே இவரது கட்சியில் நிறைய பேர் சேர்ந்துள்ளனர். தேர்தலுக்கு பிறகு வெற்றி பெற்ற பின் மேலும் பலர் இணைவார்கள். ஒருவேளை தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் எனது அகில பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தனது நிலையில் இருந்து மாறி ஆட்சி அமைக்க உதவி செய்யும்.

என்னை பொறுத்த வரை பிரதமர் பதவிக்கு இம்ரான்கான் தகுதியானவர் ஆவார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் மரியம் நவாஸ் அரசியலில் முதிர்ச்சியற்றவர். இவரால் பிரதமர் பதவியில் இருந்து கொண்டு இம்ரான்கானை விட சிறப்பாக ஆட்சி நடத்த முடியாது.

இம்ரான்கானிடம் பல நல்ல தகுதிகள் உள்ளன. ஆசிப் சர்தாரி மற்றும் நவாஸ் செரீப்பைவிட இவர் சிறந்தவர் என கருதுகிறேன். பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் ஒரு உண்மையான மனிதர். மிக குறைந்த அளவே ஊழல் குற்றச்சாட்டு இவர் மீது உள்ளது. மேலும் இவர் நிறைய வி‌ஷயங்களை கவனிக்க வேண்டும். பேச்சை குறைக்க வேண்டும்.

வெளிநாட்டில் இருந்து திரும்புவது குறித்து நான் இன்னும் முடிவு செய்ய வில்லை. பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்க்க காத்திருக்கிறேன். எனவே நாடு (பாகிஸ்தான்) திரும்புவது குறித்து சில நாட்களில் முடிவெடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார். #Musharraf #ImranKhan #pakistanelection

Tags:    

Similar News