செய்திகள்

உள் நாட்டு விவகாரத்தில் தலையிட்டால் நரகத்துக்கு செல்ல வேண்டி இருக்கும்: பிலிப்பைன்ஸ் அதிபர் மிரட்டல்

Published On 2018-06-04 00:17 IST   |   Update On 2018-06-04 00:17:00 IST
உள் நாட்டு விவகாரத்தில் தலையிட்டால் நரகத்துக்கு செல்ல வேண்டி இருக்கும் என ஐ.நா. அதிகாரிக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே மிரட்டல் விடுத்துள்ளார். #Philippines #Duterte
மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே, சர்வாதிகார போக்கு உடையவர். தன்னை எதிர்க்க கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பொதுவெளியில் நேரடியாக மிரட்டல் விடுக்கும் மனோபாவம் கொண்டவர்.

அங்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த மரியா லூர்தஸ் செரினோ, அதிபர் ரோட்ரிகோ துதர்தேவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து அவருக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தார்.

இதனால் அவரை தன்னுடைய எதிரி என்று கூறிய ரோட்ரிகோ துதர்தே, அவரை தலைமை நீதிபதி பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஓட்டெடுப்பு நடத்தி மரியா லூர்தஸ் செரினோவை பதவி நீக்கம் செய்தனர். இது குறித்து வேதனை தெரிவித்த பிலிப்பைன்சுக்கான ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் மூத்த அதிகாரியான கார்சி-சயான் “ரோட்ரிகோ துதர்தே, மரியா லூர்தஸ் செரினோவுக்கு எதிராக பொதுவெளியில் மிரட்டல்கள் விடுத்ததே, அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முக்கிய காரணம்” என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் ரோட்ரிகோ துதர்தே, நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியபோது, தன் மீது கார்சி-சயான் முன்வைத்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார்.

அப்போது அவர் பேசுகையில், “அவரிடம் (கார்சி-சயான்) சொல்லுங்கள், என் நாட்டின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று, இல்லையென்றால் அவர் நரகத்துக்கு செல்ல வேண்டி இருக்கும்” என கூறினார்.

மேலும், “அவர் ஒன்றும் சிறப்பான நபர் இல்லை. அவருடைய பதவியை நான் அங்கீகரிக்கவில்லை” என்றும் தெரிவித்தார்.   #Philippines #Duterte #tamilnews 
Tags:    

Similar News