செய்திகள்

முகத்தை மறைக்கும் விதமாக பர்தா உள்ளிட்ட ஆடைகள் அணிய டென்மார்க் அரசு தடை

Published On 2018-05-31 11:48 GMT   |   Update On 2018-05-31 11:48 GMT
டென்மார்க் நாட்டில் பொது இடங்களில் பர்தா போன்ற முகத்தை மறைக்கும் ஆடைகளைத் தடை செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஸ்டாக்ஹோம் :

டென்மார்க் நாட்டு வழக்கப்படி இரண்டு பேர் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும்போது, ஒருவர் தனது முகத்தை மறைத்திருப்பது மற்றவரை அவமதிக்கும் செயல். எனவே, டென்மார்க்கில் முகத்தை திரையிட்டு மறைக்கும் பழக்கத்திற்கு தடை விதிப்பதன் மூலம் டென்மார்க்கில் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையும் மரியாதையும் செலுத்துவதை உறுதி செய்ய முடியும் என அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் சோரப் பாப் பால்சன் கடந்த பிப்ரவரி மாதம் கூறியிருந்தார்.

இந்த தடை குறித்த சட்ட வரைவை இன்று அந்நாட்டு அரசு, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 75 உறுப்பினர்கள் இந்த தடை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதைத்தொடர்ந்து, டென்மார்க்கில் இனி பொது இடங்களில் எவரேனும் முகத்தை திரையிட்டு மறைத்திருந்தாலோ அல்லது முகத்தை மறைக்கும் விதமாக பர்தா அணிந்து இருந்தாலோ அவர்களுக்கு அபராதத்துடன் கூடிய தண்டனை வழங்கப்படும். இந்த புதிய சட்டம் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் அமல் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News