செய்திகள்

கிம் ஜாங் அன் - டிரம்ப் சந்திப்பு திட்டமிட்டபடி நடக்கும் - சீனா நம்பிக்கை

Published On 2018-05-27 14:24 IST   |   Update On 2018-05-27 14:24:00 IST
அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இடையிலான பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. #trumpkimsummit
பீஜிங்:

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார்.

இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த வியாழக்கிழமை டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று திடீரென மனமாற்றம் அடைந்தார். கிம் ஜாங் அன்னை திட்டமிட்டவாறு சந்தித்துப் பேச அவர் தற்போது முடிவு செய்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “கிம் ஜாங் அன்னை சந்திப்பது தொடர்பாக தொடர்ந்து ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. எனவே ஜூன் 12-ம் தேதி திட்டமிட்டபடி எங்களது சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இந்த தேதிக்கு பின்னரும் கூட சந்திப்பை தள்ளி வைத்துக் கொள்ளலாம்” என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ம் தேதி திட்டமிட்டவாறு நடைபெறும் என நம்புவதாகவும், இதற்காக ஆவலாக காத்திருப்பதாகவும் சீன அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #trumpkimsummit
Tags:    

Similar News