செய்திகள்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் மண விழா வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடக்கிறது

Published On 2018-05-19 01:09 GMT   |   Update On 2018-05-19 01:09 GMT
இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று மதியம் கோலாகலமாக நடக்கிறது. #PrinceHarry #MeghanMarkle
லண்டன்:

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி (வயது 33). இவர் அமெரிக்க நடிகை மேகன் மார்கிலை (வயது 36) காதலித்து வந்தார்.

இவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினர். இவர்களது காதல் திருமணத்துக்கு இளவரசர் ஹாரியின் பாட்டியும், இளவரசர் சார்லசின் தாயாருமான ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அவர்களது திருமணம் நிச்சயமானது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு மேற்கே பெர்க்‌ஷயரில் அமைந்து உள்ள வின்ட்சார் கோட்டையில், 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று மதியம் இளவரசர் ஹாரி-மேகன் கோலாகல மண விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது.

இந்த மண விழாவை கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி நடத்தி வைக்கிறார்.

இந்த மணவிழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதற்காக 11.20 மணிக்கு ராணி குடும்பத்தினர் தேவாலயத்திற்குள் வருவார்கள். அதைத்தொடர்ந்து திருமண ஆராதனை நடைபெறும்.

இந்த தேவாலயத்தினுள் 800 பேர் அமரும் வசதி உள்ளது. சுமார் 600 பேருக்கு அழைப்பிதழ் தரப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மும்பையை சேர்ந்த மைனா மகிளா என்ற தொண்டு நிறுவனத்துக்கும் திருமண அழைப்பிதழ் தரப்பட்டு உள்ளதாக தெரியவந்து உள்ளது.

இந்த திருமண விழாவையொட்டி வின்ட்சார் கோட்டையின் மீது இன்று விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திருமணம் முடிந்ததும், மணமக்கள் கேசில் ஹில், ஹை வீதி, ஷீட் வீதி, கிங்ஸ் சாலை, ஆல்பர்ட் சாலை, லாங்க் வாக் வழியாக ஊர்வலம் சென்று, பின்னர் வின்ட்சார் கோட்டைக்கு திரும்புவார்கள்.

அதைத்தொடர்ந்து அங்கு செயின்ட் ஜார்ஜ் அரங்கத்தில் வரவேற்பு நடக்கிறது. மணமக்கள் கேட் வெட்டுவார்கள். லண்டன் வயலட் பேக்கரி, பிரத்யேக கேக்கை தயாரித்து வழங்குகிறது. இந்த கேக்கை வெட்டி, வரவேற்பு விழாவில் கலந்துகொள்கிற 600 பேருக்கும் வழங்கப்படும்.



மாலையில் இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியருக்கு ஹாரியின் தந்தை இளவரசர் சார்லஸ் தனிப்பட்ட முறையில் வரவேற்பு அளிக்கிறார். இதில் மணமக்களும், குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் பங்கேற்பார்கள்.

இளவரசர் ஹாரி, மேகன் மண விழாவில் மேகனின் தந்தை தாமஸ் மார்கில் கலந்துகொள்ளமாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டதுதான் காரணம்.

எனவே அவருக்கு பதிலாக அவரது மனைவி டோரியா ராக்லண்ட்தான் மணமகள் மேகனை தேவாலயத்துக்குள் கைபிடித்து அழைத்து செல்வார் என கூறப்படுகிறது.

மண விழாவில் பங்கேற்க வருகிறவர்கள் ஆண்களாக இருந்தால் கோட், சூட்டும், பெண்களாக இருந்தால் தொப்பியும், நீண்ட கவுனும் அணிந்து வர வேண்டும் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் வாழும் அலெக்சி லுபொமிர்ஸ்கி என்ற புகைப்பட கலைஞர்தான் மணவிழா படங்களை எடுக்கிறார்.

இந்த மண விழா டெலிவிஷனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #PrinceHarry #MeghanMarkle
Tags:    

Similar News