செய்திகள்

அமெரிக்காவைத் தொடர்ந்து கிழக்கு ஜெருசலேமில் தூதரகத்தை திறந்தது கவுதமாலா

Published On 2018-05-16 10:08 GMT   |   Update On 2018-05-16 10:08 GMT
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்கா தனது தூதரகத்தை ஜெருசலேமில் திறந்த இரண்டு நாட்களுக்குள் கவுதமாலாவும் தனது தூதரகத்தை அந்நகரில் இன்று திறந்துள்ளது. #JimmyMorales #BenjaminNetanyahu
ஜெருசலேம்:

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சிலமாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். மேலும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்று உறுதியளித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

ஆனால், அவற்றை பொருட்படுத்தாமல் கிழக்கு ஜெருசலேம் நகரில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகம் கடந்த 14-ம் தேதி  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, மத்திய அமெரிக்க நாடான கவுதமாலா ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கிறது என அந்நாட்டின் அதிபர் ஜிம்மி மொரால்ஸ் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தார். மேலும், இஸ்ரேலின் 70 வது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக மே மாதம் டெல் அவிவ் நகரில் உள்ள கவுதமாலாவின் தூதரகம் மாற்றப்பட்டு ஜெருசலேம் நகரில் திறக்கப்படும் என தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், ஜெருசலேம் நகரில் கவுதமாலா தூதரகத்தை இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் கவுதமாலா அதிபர் ஜிம்மி மொரால்ஸ் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். தூதரகத்தை திறந்து வைத்து பேசிய ஜிம்மி மொரால்ஸ், மற்ற உலக நாடுகளும் இஸ்ரேலுக்கான தங்களது தூதரகத்தை  ஜெருசலேமில் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து  பெஞ்சமின் நேதன்யாகு அடுத்த வெளிநாட்டு பயணமாக கவுதமாலா செல்லப்போவதாக அறிவித்தார்.

1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக உருவாகிய போது அதை அங்கீகரித்த இரண்டாவது நாடு கவுதமாலா, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அங்கு தனது தூதரகத்தை திறந்துள்ள இரண்டாவது நாடும் கவுதமாலா என்பது குறிப்பிடத்தக்கது. #JimmyMorales #BenjaminNetanyahu
Tags:    

Similar News