செய்திகள்

மலேசியாவில் ஜி.எஸ்.டி. வரி முறையை ரத்து செய்த புதிய அரசு

Published On 2018-05-11 07:14 GMT   |   Update On 2018-05-11 08:21 GMT
மலேசியாவின் பிரதமராக பதவியேற்று கொண்ட அன்றைய தினமே ஜி.எஸ்.டி. வரி ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மகாதீர் முகமது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #MalaysiaElection #MahathirMohamad #MalaysiaGSTcanceled

கோலாலம்பூர்:

நமது நாட்டில் ஏற்கனவே இருந்த மத்திய கலால் வரி, சுங்க வரி, விற்பனை வரி, சேவை வரி, மாநில வரிகள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஜி.எஸ்.டி. என்ற புதிய வரி அமல் படுத்தப்பட்டது.

இதில் உள்ள பல்வேறு குழப்பங்களாலும், கடுமையான சட்டத்திட்டங்களாலும் வியாபாரிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த வரி முறைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இதேபோலத்தான் மலேசியாவில் ஏற்கனவே இருந்த விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்.எஸ்.டி) 2015-ம் ஆண்டில் மாற்றப்பட்டு புதியதாக சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) கொண்டுவரப்பட்டது.

இந்த வரி முறையில் பல்வேறு குழப்பங்களும், சிக்கல்களும் இருந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அரசு கண்டு கொள்ளாமல் செயல்படுத்தி வந்தது.

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்வோம் என்று அறிவித்தது. அதன்படி அந்த கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. மகாதீர் முகமது பிரதமர் ஆகி இருக்கிறார்.

நேற்று பதவி ஏற்றுக் கொண்ட அவர் உடனடியாக ஜி.எஸ்.டி. வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டார். மீண்டும் எஸ்.எஸ்.டி. என்ற பழைய வரி முறையே அமலில் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். #MalaysiaElection #MahathirMohamad #MalaysiaGSTcanceled

Tags:    

Similar News