செய்திகள்

நடுவானில் ஜன்னலில் விரிசல் ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்க விமானம்

Published On 2018-05-02 23:47 IST   |   Update On 2018-05-02 23:47:00 IST
அமெரிக்காவின் சிக்காகோவில் இருந்து நெவார்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தின் ஜன்னல் நடுவானில் உடைந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #southwestairlines #planewindowcrack

நியூயார்க்:

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் இருந்து நேற்று சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் நெவார்க் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த விமானத்தில் 76 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் ஒரு ஜன்னல் கண்ணாடி விரிசல் ஏற்பட்டது. 

இதுகுறித்து விமானிகளுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் கிளிவ்லேண்ட்-ஹாப்கின்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டு, அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானிகள் விரைந்து செயல்பட்டதால் பெரிய அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.



இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், பயணிகளுக்கு புதிய விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் நியூயார்க் நகரில் இருந்து டல்லாஸ் நோக்கி சென்றுகொண்டிருந்த சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட என்ஜின் வெடிப்பால், ஜன்னல் உடைந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #southwestairlines

Similar News