செய்திகள்

சுந்தர் பிச்சைக்கு அமெரிக்க பாராளுமன்ற குழு நோட்டீஸ்

Published On 2018-03-27 16:28 IST   |   Update On 2018-03-28 09:52:00 IST
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் மற்றும் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஆகியோருக்கு அமெரிக்க பாராளுமன்ற குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வாஷிங்டன்:

ஃபேஸ்புக் சேவையை பயன்படுத்தும் சுமார் ஐந்து கோடி பேரின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா எனும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக ஃபேஸ்புக், கூகுள் மற்றும் டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் விளக்கம் அளிக்க அமெரிக்க பாராளுமன்ற குழு சம்மன் அனுப்பியுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் ஜேக் டார்சி ஆகியோர் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் பாராளுமன்ற நீதித்துறை குழுவின் முன் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கிய விவகாரம் பூதாகாரமாய் வெடித்தது.



இதேபோல், பிரிட்டன் நாட்டில் பேஸ்புக் பயன்படுத்தி வருபவர்களைப் பற்றிய தகவல்களும் களவாடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த பிரிட்டனில் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் அல்லது அவரது நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப உயரதிகாரி பாராளுமன்ற விசாரணை கமிட்டியின் முன்னர் ஆஜராகி எம்.பி.க்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கமிட்டியின் விசாரணையில் சூக்கர்பர்க் ஆஜராக மாட்டார். அவருக்கு பதிலாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப உயரதிகாரி மைக் ஸ்குரோப்ஃபெர் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News