செய்திகள்

பிரேசில்: இரவு விடுதியில் துப்பாக்கி சூடு - 14 பேர் பலி

Published On 2018-01-28 05:35 IST   |   Update On 2018-01-28 05:41:00 IST
பிரேசில் நாட்டில் அமைந்துள்ள இரவு விடுதியில் கலவரக்காரர்கள் நேற்று நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர். #Brazil #NightClub
பிரேசிலியா:

பிரேசில் நாட்டில் அமைந்துள்ள இரவு விடுதியில் கலவரக்காரர்கள் நேற்று நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரேசில் நாட்டின் வடகிழக்கே அமைந்துள்ள போர்டலேசா பகுதியில் இரவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று அந்த இரவு விடுதிக்குள் ஒரு கும்பல் திடீரென நுழைந்தது. அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த துப்பாக்கியால் எதிர்ப்பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட தொடங்கினர்.

இந்த தாக்குதலில் இரு சிறுவர்கள் உள்பட 14 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 12 வயது சிறுவன் உள்பட பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற ராணுவத்தினர், கலவரக்காரர்களை அடக்கும் பணியில் ஈடுபட்டனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Brazil #NightClub

Similar News