செய்திகள்
ஷெரின், வெஸ்லி மேத்யூ

அமெரிக்காவில் மாயமான இந்திய சிறுமியின் வளர்ப்பு தந்தை மீண்டும் கைது

Published On 2017-10-24 05:19 GMT   |   Update On 2017-10-24 05:20 GMT
அமெரிக்காவில் மாயமான இந்திய சிறுமியின் வளர்ப்பு தந்தை வெஸ்லி மேத்யூ நேற்று ரிச்சர்ட்சன் போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவரை தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஹூஸ்டன்:

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் வெஸ்லி மேத்யூ. இவரது மனைவி சினி மேத்யூ.

இவர்கள் இருவரும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ரிச்சர்ட்சன் நகரில் வசித்து வருகிறார்கள். சாப்ட்வேர் என்ஜினீயர்களான இவர்களுக்கு குழந்தை இல்லை.

எனவே கடந்த ஆண்டு ஊருக்கு வந்த போது கேரளாவில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருந்து 3 வயது சிறுமி ஒன்றை தத்தெடுத்தனர். அந்த குழந்தையையும் அவர்கள் அமெரிக்கா அழைத்து சென்றனர்.

இக்குழந்தைக்கு அவர்கள் ஷெரின் என பெயரிட்டு அழைத்து வந்தனர். கடந்த 7-ந்தேதி இரவு இக்குழந்தை திடீரென மாயமாகிவிட்டதாக குழந்தையின் வளர்ப்பு தந்தை வெஸ்லி மேத்யூ, ரிச்சர்ட்சன் போலீசில் புகார் செய்தார்.

அதில் குழந்தை இரவில் பால் குடிக்க மறுத்ததால் அதனை வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்தேன். சிறிது நேரம் கழித்து பார்த்த போது குழந்தையை காணவில்லை என்று புகாரில் கூறியிருந்தார்.

இப்புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ரிச்சர்ட்சன் போலீசார், குழந்தையை கொடுமை செய்ததாக வெஸ்லி மேத்யூ மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் அபராதம் செலுத்தி ஜாமீனில் வெளியே வந்தார்.

அதே நேரம் அவரது குழந்தையை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்காக அவரது வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் சம்பவம் நடந்த நேரத்தில் வெஸ்லி மேத்யூ வீட்டில் இருந்த ஒரு கார் புறப்பட்டு செல்வதும், ஒரு மணி நேரத்தில் அந்த கார் திரும்பி வந்த காட்சிகளும் பதிவாகி இருந்தது. இதன்மூலம் சிறுமி மாயமான விவகாரத்தில் அதன் வளர்ப்பு தந்தை மீது போலீசாருக்கு சந்தேகம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வெஸ்லியின் வீட்டில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் உள்ள ஒரு கால்வாயில் சிறுமி ஒருவரின் பிணம் மீட்கப்பட்டது. அந்த பிணம் மாயமான இந்திய சிறுமி ஷெரின் மேத்யூவின் உடலா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே வெஸ்லி மேத்யூ நேற்று ரிச்சர்ட்சன் போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவரை தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெஸ்லி மேத்யூ மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அமெரிக்க சட்டப்படி ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அங்குள்ள சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News