செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம்: ராஜபக்சே ஒப்புக்கொண்டார்

Published On 2017-09-12 13:35 IST   |   Update On 2017-09-12 13:35:00 IST
இலங்கையில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது விதிகளை மீறி புத்த தேவாலயங்களில் உள்ள பக்தர்களுக்கு துணிகள் வழங்கியதை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஒப்புக்கொண்டுள்ளார்.
கொழும்பு:

இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது அதிபராக இருந்த ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்த மந்திரி மைத்ரிபால சிறிசேனா யாரும் எதிர்பாராத நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளராக களம் இறங்கினார்.

தேர்தலில் அமோக வெற்றி பெற்று சிறிசேனா அதிபரானார். அந்த தேர்தலின் போது ராஜபக்சேவின் முன்னாள் செயலர் லலித் வீரதுங்கா மற்றும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் இயக்குநர் அனுஷா பால்பிட்டா ஆகிய இருவரும் தேர்தல் விதிமுறையை மீறியதாக கைது செய்யப்பட்டனர்.

லலித் தேர்தலின் போது புத்த தேவாலயங்களில் உள்ள பக்தர்களுக்கு 'சில்' எனப்படும் துணிகள் கொடுத்ததாகவும், அதற்கு அனுஷா பால்பிட்டா அரசு நிதியிலிருந்து 650 மில்லியன் ரூபாயை சட்ட விரோதமாக கொடுத்ததாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருவருக்கும் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டடதையடுத்து இருவரும் வெலிகடா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று இலங்கை முன்னாள் பிரதமரும், குருனகலா மாவட்டத்தின் எம்.பி.யுமான மகிந்த ராஜபக்சே வெலிகடா சிறைக்கு சென்று அவர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் விதிகள் மீறப்பட்டதை ஒப்புக்கொண்டார். மேலும் தன்னுடைய ஆணையின் பேரில் தான் லலித் துணிகள் வழங்கியதாகவும் அவர் கூறினார். துணிகள் வழங்கப்பட்டது குற்றம் இல்லை. ஆனால் தேர்தலின் போது வழங்கப்பட்டது தான் தவறு என ராஜபக்சே தெரிவித்தார்.

Similar News