செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு எதிரான கடற்தொழில் சட்ட மசோதா: இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்

Published On 2017-07-06 10:22 GMT   |   Update On 2017-07-06 10:22 GMT
தமிழக மீனவர்களுக்கு எதிரான கடற்தொழில் சட்டத்திருத்த மசோதாவை இலங்கை அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.
கொழும்பு:

ஆழ்கடலில் தங்கள் பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்களை விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கின்றனர். ஆனால், அவர்களின் வாழ்வாதாரமான படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இதுதொடர்பாக மத்திய அரசு நடடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், தமிழக மீனவர்களுக்கு எதிரான கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்திருத்த மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீன்வளத்துறை மந்திரி மகிந்த அமரவீரா இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.



எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டு மீனவர்களை கைது செய்யவும், அவர்களுக்கான அபராதத்தை பல மடங்கு உயர்த்தவும் இந்த சட்டம் வகை செய்கிறது.



சட்டவிரோதமாக மீன்பிடித்தால் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது. இதேபோல் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தாலும் அபராதம் விதிக்கப்படும்.

இந்த சட்டம் அமலுக்கு வந்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களின் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News