செய்திகள்

புதிய பிரதமரை விரைவில் தேர்ந்து எடுங்கள்: நேபாள அரசியல் கட்சிகளுக்கு அதிபர் மீண்டும் வலியுறுத்தல்

Published On 2017-06-01 12:37 GMT   |   Update On 2017-06-01 12:37 GMT
நேபாளத்தில் பிரதமர் ராஜினாமா செய்து 7 நாட்களைக் கடந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் புதிய பிரதமரை விரைவில் தேர்வு செய்யவேண்டும் என அதிபர் பண்டாரி மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
காத்மாண்டு:

நேபாளத்தில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகளிடையே கடந்த ஆண்டு அதிகார பகிர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, பிப்ரவரி 2018-ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கான தேர்தல் முறைப்படி நடைபெறும் வரை இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செலுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த அதிகார பகிர்வு ஒப்பந்தத்துக்கு மதிப்பளித்து 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் பிரதமர் பிரசண்டா தனது பதவியை கடந்த மாதம் 24-ம் தேதி ராஜினாமா செய்தார். நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷேர் பகதூர் தியூபா புதிய பிரதமராக பதவியேற்கும் வகையில் பிரசண்டா ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது.

பிரசண்டா ராஜினாமா செய்ததையடுத்து, ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும்படி அதிபர் பித்யா தேவி பண்டாரி கேட்டுக்கொண்டார். ஆனால், ஒருமித்த கருத்துடைய பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. எனவே, 7 நாட்களுக்குள் பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய முடியவில்லை.

இதையடுத்து, புதிய பிரதமரை தேர்வு செய்து பெரும்பான்மை அரசை உருவாக்கும் நடைமுறைகளை விரைவில் தொடங்க வேண்டும் என அரசியல் கட்சிகளை அதிபர் பண்டாரி மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை, பிரசண்டா பிரதமராக நீடிப்பார்.
Tags:    

Similar News