செய்திகள்

முன்னாள் ராணுவ அதிகாரி மாயமானதற்கு இந்தியா மீது பழிபோடும் பாகிஸ்தான்

Published On 2017-04-14 07:57 GMT   |   Update On 2017-04-14 07:57 GMT
நேபாளத்தில் பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி காணாமல் போனதற்கு இந்திய உளவு அமைப்பின் பங்கு இருப்பதை மறுக்க முடியாது என பாகிஸ்தான் மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளது.
இஸ்லாமாபாத்:

உளவு பார்த்ததாக கூறி இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் முகமது ஹபிப் ஜாகீர், வேலை தேடி கடந்த வாரம் நேபாள தலைநகர் காத்மாண்டு சென்ற போது மாயமானார். அவரை இந்திய உளவு அமைப்புகள் கடத்தியிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

இந்த சூழ்நிலையில்தான் குல்பூஷண் ஜாதவுக்கு தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதனால் இந்த இரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. ஜாகீர் மாயமானதில் வெளிநாட்டு உளவு அமைப்பின் பங்கு இருப்பதை மறுக்க முடியாது என இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுகமாக குற்றம்சாட்டியது. ஜாதவ் விவகாரத்தையும் ஜாகீர் விவகாரத்தையும் ஒப்பிட முடியாது என்றும் கூறியது.

இந்நிலையில், குல்பூஷண் ஜாதவ் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது, குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்ததில் எந்த சமரசமும் இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.

Similar News