செய்திகள்

இந்தியா வருகிறார் நேபாள அதிபர்: 17-ம் தேதி முதல் 5 நாட்கள் சுற்றுப்பயணம்

Published On 2017-04-12 15:24 GMT   |   Update On 2017-04-12 15:24 GMT
நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி பதவியேற்ற பின்னர் முதல் முறையாக வரும் 17-ம் தேதி இந்தியாவிற்கு வருகிறார்.
புதுடெல்லி:

நேபாளத்தில் கடந்த ஆண்டு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டதையடுத்து, இந்தியா-நேபாளம் இடையிலான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டது. அதன்பின்னர், உறவுகளை புதுப்பிக்கும் வகையில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசினார். அத்துடன், நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரியை இந்தியாவிற்கு வரும்படி அழைப்பும் விடுத்தார்.

இதனை ஏற்ற நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி, வரும் 17-ம் தேதி முதல் 5 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். 2015-ம் ஆண்டு அவர் பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கு முதல் முறையாக வருகை தர உள்ளார்.

நேபாள அதிபரின் வருகை குறித்த தகவல் மற்றும் அவரது பயணத் திட்டம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நேபாள அதிபர் வருகையின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான பல ஆண்டு நட்புறவு மற்றும் வரலாற்று, கலாச்சார இணைப்புகள் மேலும் வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளது.

நேபாள அதிபர் தனது பயணத்தின்போது இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். குஜராத் மற்றும் ஒடிசாவுக்கும் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள அதிபர் தனது இந்திய சுற்றுப் பயணம் தொடர்பாக, காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். 

Similar News