செய்திகள்

நைஜீரியா: இளம்பெண் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் பலி

Published On 2017-03-15 11:58 GMT   |   Update On 2017-03-15 11:58 GMT
நைஜீரியாவில் குடியிருப்பு பகுதியில் 4 இளம்பெண் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
அபுஜா:

நைஜீரியா நாட்டில் அரசுக்கு எதிராக போகோ ஹராம் தீவிரவாதிகள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். முக்கிய நகரங்களில் தாக்குதல்களை நடத்தியும், பொது மக்களை பிணையக் கைதிகளாக கடத்தியும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்குவதற்காக பண்ணாட்டு ராணுவம் அப்பகுதியில் முகாமிட்டு பதிலடி தாக்குதல்களை கொடுத்து வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள மைதுகுரி அருகே முனா கரேஜ் என்ற இடத்தில் குடியிருப்பு பகுதியில் இன்று பிற்பகல் நுழைந்த 4 போகோ ஹராம் இளம்பெண் தீவிரவாதிகள் அங்குள்ள வீட்டின் கதவை தட்டியுள்ளனர். கதவை வீட்டு உரிமையாளர் திறந்ததும் தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.



இந்த கோர தாக்குதலில் 4 இளம்பெண் தீவிரவாதிகள் மற்றும் 2 பொதுமக்கள் உடல் சிதறி பலியாகினர். மேலும், 16 பேர் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நிகழ்ந்த முனா கரேஜ் பகுதி கடந்த எட்டு ஆண்டுகளாக தீவிரவாதிகளின் பிடியில் இருந்து சின்னாபின்னாமாகியுள்ளது.

தீவிரவாதிகளை பற்றி ராணுவத்தினருக்கு தகவல் அளித்ததாக கூறி நேற்று மூன்று பேரை கொலை செய்யும் வீடியோவை போகோ ஹராம் தீவிரவாதிகள் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Similar News