செய்திகள்

உக்ரைனில் மீண்டும் போர் பதட்டம்: ரஷிய ஆதரவு படை தாக்குதல்

Published On 2017-02-02 12:44 IST   |   Update On 2017-02-02 12:44:00 IST
உக்ரைன் பகுதிக்குள் ரஷிய ஆதரவு படை தாக்குதல் நடத்த தொடங்கியதால் மீண்டும் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மாஸ்கோ:

ரஷியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடுகளில் ஒன்று உக்ரைன். தற்போது ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.

உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள கிரிமியா பகுதியை 2014-ம் ஆண்டு ரஷியா வலுக்கட்டாயமாக தன்னோடு இணைத்து கொண்டது.

மேலும் உள்ள சில பகுதிகளை ரஷியா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த பகுதியில் ரஷிய ஆதரவு படையினர் உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வந்தனர். அவர்கள் கட்டுப்பாட்டில் சில பகுதிகள் இருக்கின்றன.

ஐ.நா. சபை மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலையீட்டால் அங்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதனால் கடந்த 1½ ஆண்டுகளாக மோதல் எதுவும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் இப்போது மீண்டும் மோதல் வெடித்து இருக்கிறது. ரஷிய ஆதரவு படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு அருகே உக்ரைனில் அவுடிவ்கா என்ற நகரம் உள்ளது. இங்கு ரஷியா ஆதரவு படையினர் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். பதிலுக்கு உக்ரைன் ராணுவமும் தாக்கி வருகிறது.

இந்த சண்டையில் உக்ரைனை சேர்ந்த 7 வீரர்களும், பொதுமக்களில் 3 பேரும் உயிர் இழந்துள்ளனர். ரஷிய ஆதரவு படை வீரர்களும் பலர் பலியாகி இருக்கிறார்க்ள. இந்த சண்டை காரணமாக அங்கு மீண்டும் போர் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது சம்பந்தமாக ஐ.நா.சபை கவலை வெளியிட்டுள்ளது. இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்துள்ளது.

Similar News