செய்திகள்

மாலி ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல்: 33 பேர் பலி

Published On 2017-01-18 12:59 GMT   |   Update On 2017-01-18 12:59 GMT
மாலி நாட்டின் ராணுவ முகாமில் தற்கொலைப்படை தீவிரவாதி இன்று நடத்திய திடீர் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
பமாக்கோ:

மாலின் நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள காவோ நகரில் ராணுவ முகாம் உள்ளது. இங்கு ஆயுதப் படை வீரர்கள் வழக்கமான பயிற்சிக்காக அணிவகுத்து வந்தனர். அப்போது, முகாமை ஒட்டியுள்ள பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனம் திடீரென வெடித்துச் சிதறியது. வெடிகுண்டு நிரப்பிய அந்த வாகனத்தை ஓட்டி வந்த தற்கொலைப் படை தீவிரவாதி அதனை வெடிக்கச் செய்துள்ளான்.

இதன் காரணமாக, அப்பகுதியில் கூடியிருந்தவர்கள் நாலாபுறம் தூக்கி வீசப்பட்டனர். பலர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிலரது உடல் உறுப்புகள் துண்டு துண்டாக சிதறின.

இந்த தாக்குதலில் 25 பேர் பலியானதாக ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 33 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் ஐ.நா. அமைதிப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ராணுவ ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டன.

மாலியில் 2013ம் ஆண்டு பிரெஞ்சு தமையிலான கூட்டுப்படை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக, வடக்கு பகுதியை ஆக்கிரமித்திருந்த தீவிரவாத குழுக்கள் ஒடுக்கப்பட்டன. எனினும், சில பகுதிகளில் தீவிரவாத குழுக்கள் தலைதூக்கி உள்ளதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.

Similar News