செய்திகள்

ஜப்பானின் போர் நினைவிடமான புனித தலத்தில் ராணுவ மந்திரி அஞ்சலி

Published On 2016-12-30 04:38 GMT   |   Update On 2016-12-30 04:38 GMT
ஜப்பானின் போர் நினைவிடமான புனித தலத்தில் அந்நாட்டின் ராணுவ மந்திரி டோமி இனடா போரின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
டோக்கியோ:

2-ம் உலகப்போருக்கு பின்னரும் ஜப்பான் மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து சிறிய மனக் கசப்பு இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பான் சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களுக்கு சென்று போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவுடன் நட்பு பாராட்டும் வகையில் கடந்த 27-ந் தேதி, அமெரிக்காவின் பியர்ல் துறைமுகத்தில் ஜப்பான் தாக்குதல் நடத்திய 75-வது ஆண்டு நினைவு தினத்தில் அதிபர் ஒபாமாவுடன் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கலந்து கொண்டு குண்டு வீச்சில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில், ஜப்பானில் போரின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் போர் குற்றத்தில் ஈடுபட்டதற்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் டோக்கியோவில் உள்ள யுசுகுனி என்ற புனித தலத்திற்கு அந்நாட்டின் ராணுவ மந்திரி டோமி இனடா நேற்று நேரில் சென்றார். அங்கு அவர் போரின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ஜப்பான் ராணுவ மந்திரியின் இந்த செயல் அதன் நட்பு நாடுகளான தென் கொரியா மற்றும் சீனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது ஜப்பானின், போர்க்கால அட்டூழியங்களை நினைவுபடுத்துவதாக கூறி அந்த இருநாடுகளும் வருத்தம் தெரிவித்து உள்ளன.

Similar News