செய்திகள்

சிரிய ராணுவம்- கிளர்ச்சியாளர்கள் இடையே போர் நிறுத்த உடன்பாடு

Published On 2016-12-29 13:00 GMT   |   Update On 2016-12-29 13:01 GMT
சிரிய ராணுவம் - கிளர்ச்சியாளர்கள் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
சிரியாவில் ஆசாத் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. ஆசாத் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியான தேசியக் கூட்டணி போர்க்கொடி தூக்கி வந்தது. மேலும், எதிர்க்கட்சிகளின் ஒரு அமைப்பு ஆயுதம் ஏந்தி போராடத்துவங்கியது. கடந்த 2011-ல் இருந்து சிரியாவில் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஐ.எஸ். தீவிரவாதிகளும் சிரியாவில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இதனால் அமெரிக்க ராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் தாக்குதல் நடத்தியது. கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து அதிபர் ஆசாத்திற்கு ஆதரவாக ரஷியா போரில் குதித்தது. இதனால் சிரியாவில் சண்டை உச்சக்கட்டத்தை அடைந்தது.

2011-ல் இருந்து நடைபெற்று வரும் சண்டையின் காரணமாக சுமார் 3 லட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளது. இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் ரஷியா இணைந்து கடந்த செப்டம்பர் மாதம் போர் நிறுத்த உடன்பாடுக்கு ஏற்பாடு செய்தனர்.

அதன்படி போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தேசிய அளவில் இந்த உடன்பாடு நடைமுறை படுத்தப்பட்டது. அதன்பின் ஆங்காங்கே வன்முறை வெடிக்க போர் ஒப்பந்த உடன்பாடு மீறப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம் கடும் போருக்குப்பின் அலேப்போ நகரை மீட்டது. இந்நிலையில் சிரிய ராணுவம் - தேசிய கூட்டணியின் ஆயுதம் ஏந்திய அமைப்புடனும் ரஷிய போர் நிறுத்த உடன்பாடுக்கு பேச்சுவார்த்தை நடத்தியது. இதை இரண்டு தரப்பும் ஒப்புக் கொண்டனர். இதை ரஷிய அதிபர் புதன் அறிவித்தார்.

இதை இரண்டு பிரிவுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இதனால் இன்று நள்ளிரவு முதல் சிரியா முழுவதும் போர் நிறுத்தம் ஏற்பட இருக்கிறது.

Similar News