செய்திகள்

கொலம்பியா நாட்டில் உளவு அமைப்பின் தலைவருக்கு 30 ஆண்டு சிறை

Published On 2016-11-25 20:44 GMT   |   Update On 2016-11-25 20:44 GMT
அதிபர் வேட்பாளர் கொலை வழக்கில் கொலம்பியா நாட்டில் உளவு அமைப்பின் தலைவருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
பகோட்டா:

லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 1990-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் பத்திரிகையாளரான லூயிஸ் கார்லோஸ் காலன் என்பவர் போட்டியிட்டார். அவர் 1989-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

பல்லாயிரம் பேர் பங்கேற்ற கூட்டத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அப்போது அங்கு ‘டாஸ்’ என்னும் உளவு அமைப்பின் தலைமை பதவியில் இருந்த ஜெனரல் மிக்குவல் மாஸா மார்குயிஸ், காலனுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்ததுதான் அவரது படுகொலைக்கு காரணம் ஆயிற்று என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அவர் மீது அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு அளித்தார்.  

Similar News