செய்திகள்

துருக்கியில் கவர்னர் அலுவலகத்தில் கார் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி

Published On 2016-11-24 23:50 GMT   |   Update On 2016-11-24 23:51 GMT
துருக்கியில் கவர்னர் அலுவலகத்தில் கார் குண்டுவெடிப்பில் சிக்கி 2 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 16 பேர் காயம் அடைந்தனர்.
இஸ்தான்புல்:

துருக்கி நாட்டில் சமீப காலமாக குறிப்பிட்ட ஒரு மதத்தை சேர்ந்த பயங்கரவாதிகளும், குர்து இன போராளிகளும், இடதுசாரி போராளிகளும் குண்டுவெடிப்புகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அடானா நகர கவர்னர் அலுவலகத்தின் நுழைவாயில் அருகே வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து நேற்று காலை உள்ளூர் நேரப்படி 8 மணியளவில் குண்டுகள் வெடித்து சிதறின. இதனால் அந்தப் பகுதி புகை மண்டலமாக மாறியது. ஜன்னல்கள் பெயர்ந்து விழுந்தன. கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 2 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 16 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்க வில்லை.

இருப்பினும் குண்டுகள் வெடித்த காரின் நம்பர் பிளேட்டு அடையாளம் காணப்பட்டு விட்டது. இந்த சம்பவத்தில் பெண் பயங்கரவாதி ஒருவர் ஈடுபட்டிருக்கக்கூடும் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இந்த குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவில்தான் சிரியாவில் உள்ள ஐ.எஸ். இயக்கத்தினர் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த பயன்படுத்தி வரும் இன்சர்லிக் விமானப்படை தளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News