செய்திகள்

சென்னையில் இருந்து ஜெர்மன் செல்லும் லுப்தான்சா LH-759 விமானம் ரத்து

Published On 2016-11-24 13:50 GMT   |   Update On 2016-11-24 13:50 GMT
லுப்தான்சா விமானிகள் வேலைநிறுத்தம் எதிரொலியால் சென்னையில் இருந்து ஜெர்மன் செல்லும் LH-759 விமானத்தின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெர்லின்:

ஜெர்மன் நாட்டிலுள்ள லுப்தான்சா விமான நிலையத்தில் பணிபுரியும் பைலட்டுகள் கடந்த இருதினங்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்கூட்டியே ஓய்வு பெற விரும்பும் 19 ஆயிரம் பணியாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும், செலவு குறைப்பு நடவடிக்கைக்காக புதிதாக ஓய்வூதிய பலன் குறைப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

விமானிகள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தினால் இதுவரை 1800-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிராங்பர்ட், மூனிச், டஸல்டர்ப் ஆகிய பகுதிகளிலிருந்து பிற பகுதிகளுக்குச் செல்லும் நீண்ட தொலைவு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், லுப்தான்சா விமானிகள் யூனியன் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தினை அடுத்து 24 மணி நேரத்திற்கு நீட்டிப்பு செய்துள்ளது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி லுப்தான்சா விமானிகள் தொடர்ச்சியாக பல்வேறு கட்ட இடைவெளிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, லுப்தான்சா விமானிகள் ஸ்டிரைக் எதிரொலியால் சென்னையில் இருந்து ஜெர்மன் செல்லும் LH-759 விமானத்தின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Similar News