செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பதவியை நீட்டிக்க ஐகோர்ட்டில் வழக்கு

Published On 2016-11-15 11:26 IST   |   Update On 2016-11-15 11:26:00 IST
பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதி ரஹீல் ஷரிப்பின் பதவியை நீட்டிக்க வேண்டும் என லாகூர் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷரிப்பின் மூன்றாண்டுகால பதவி வரும் 28-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், இந்த மாதம் இறுதியில் ஓய்வுபெறவுள்ள ராணுவ தளபதி ரஹீல் ஷரிப் பொது தேர்தலில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி ராவல்பிண்டி இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட நகரங்களில் கடந்த வாரம் புதிதாக முளைத்த பேனர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரஹீல் ஷரிப்பின் பதவியை நீட்டிக்க வேண்டும் என லாகூர் உயர்நீதி மன்றத்தில் நேற்று தொடரப்பட்டுள்ள வழக்கு அந்த பரபரப்பை இருமடங்காக்கியுள்ளது.

இந்த வழக்கை தொடர்ந்திருக்கும் பிரபல வழக்கறிஞர் காஸி இயாமுதீன், ‘ராணுவ தளபதியான ரஹீல் ஷரீப் தலைமையில் நாட்டில் தீவிரவாதம் பெருமளவுக்கு ஒடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பதவியில் அவர் தொடர வேண்டும் என்பது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏற்கனவே, ராணுவ தளபதியின் பதவி பல ஆட்சிக் காலங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாட்டின் நலன் கருதி, தளபதி ரஹீல் ஷரீபின் பதவிக் காலத்தை நீட்டிக்குமாறு நவாஸ் ஷெரிப் தலைமையிலான அரசுக்கு இந்த கோர்ட் உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மீதான விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது.

Similar News