உலகம்

அமெரிக்காவில் துணிகரம்: சிறைச்சாலையில் துளை போட்டு 10 கைதிகள் தப்பி ஓட்டம்

Published On 2025-05-18 05:13 IST   |   Update On 2025-05-18 05:13:00 IST
  • லூசியானா சிறையில் துளை போட்டு 10 கைதிகள் தப்பியோடினர்.
  • உடந்தையாக இருந்த 3 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்பட சுமார் 1,500 பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சிறைச்சாலையில் எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். ஆனால் அங்குள்ள சில கைதிகள் நள்ளிரவு நேரம் கழிப்பறை சென்றிருந்தனர்.

அதன்பின் கழிப்பறையின் பின்னால் உள்ள துளை வழியாக 10 கைதிகள் ஏறி குதித்து தப்பினர். இந்தச் சம்பவம் நடந்த 7 மணி நேரத்துக்குப் பிறகே சிறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது தப்பிச்சென்ற கைதிகள் சிறையில் இருந்து வெளியேறியதும் சீருடைகளை மாற்றி விட்டு வேறு ஆடைகளை அணிவது தெரிய வந்தது.

பின்னர் சந்தேகம் வராத வகையில் குடியிருப்பு பகுதியில் நடந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

தப்பியோடியவர்களில் ராபர்ட் மூடி (21) என்ற கைதியை மட்டும் போலீசார் பிடித்தனர். அவர் ஏற்கனவே இதேபோல் 2 முறை தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, மற்ற கைதிகளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

விசாரணையில் கைதிகள் நள்ளிரவு நேரம் தங்களது அறையில் இருந்து வெளியேற அதிகாரிகள் சிலர் உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு உடந்தையாக செயல்பட்ட 3 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News