உலகம்

மலேசியாவில் ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி 10 பேர் பலி: ஒத்திகையின்போது விபத்து

Published On 2024-04-23 05:38 GMT   |   Update On 2024-04-23 06:42 GMT
  • மலேசியாவில் கடற்படை தினத்தின் போது ஒத்திகை நடந்தது.
  • அப்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதியதில் 10 பேர் பலியாகினர்.

கோலாலம்பூர்:

மலேசியாவில் கடற்படை தினத்தின் 90-ம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக இன்று காலை பெரக் பகுதியில் லுமுட் நகரில் உள்ள கடற்கடை தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இந்த ஒத்திகையில் கடற்படையின் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன. அவைகள் நடுவானில் சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன.

அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டன. ஒரு ஹெலிகாப்டர் மற்றொரு ஹெலிகாப்டரில் ரோட்டர் பகுதியை இடித்தது. இதில் 2 ஹெலிகாப்டர்களும் நடுவானில் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதிக் கொண்டன. பின்னர் அவை தரையில் விழுந்து நொறுங்கின.

உடனே தீயணைப்பு வீரர்கள், மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஹெலிகாப்டர்களில் இருந்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களை உடல்களை மீட்டனர்.

இதுகுறித்து மலேசிய கடற்படை கூறும்போது, ஒத்திகை நிகழ்ச்சியின்போது 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் அதில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்களை அடையாளம் காண உடல்கள் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தது.

மலேசிய கடற்படை தின நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து சம்பவம் அந்நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளானது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Tags:    

Similar News