செய்திகள்
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு படைப்பதற்காக தொட்டில் கட்டி எடுத்து செல்லப்பட்ட 150கிலோ எடையுள்ள கொழுக்கட்டை

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்

Published On 2018-09-13 04:58 GMT   |   Update On 2018-09-13 04:58 GMT
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு இன்று 150 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். #VinayagarChathurthi
மலைக்கோட்டை:

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் மலைக்கோட்டையின் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு படைப்பதற்காக 150 கிலோவில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது. அந்த கொழுக்கட்டையை இரண்டாக பிரித்து, உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ, மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ என படைக்கப்பட்டது.

முன்னதாக இன்று காலை 9மணியளவில் மடப்பள்ளியில் இருந்து தொட்டில் கட்டி கொழுக்கட்டையை மலை உச்சிக்கும், அடிவாரத்திற்கும் தூக்கி சென்று உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு வைத்து படையல் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக கொழுக்கட்டைகள் வழங்கப்பட்டது. விழாவையொட்டி மலைக்கோட்டை கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வருகிற 26-ந்தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. இதில் தினமும் விநாயகர் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதே போல் திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். #VinayagarChathurthi #GaneshChathurthi
Tags:    

Similar News