செய்திகள்
இண்டர்நெட் கோப்புப்படம்

ஊரடங்கு முழுக்க அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா இலவசமாக வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

Published On 2020-04-17 14:37 IST   |   Update On 2020-04-17 14:37:00 IST
இந்தியாவில் பொது மக்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்சமயம் அது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் மே 3 ஆம் தேதி வரை பொது மக்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா, டிடிஹெச் போன்றவை இலவசமாக வழங்க மத்திய அரசு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த மனுவில் ஊரடங்கு காரணமாக பொது மக்கள் மனரீதியில் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொள்ள உத்தரவிட கோரப்பட்டுள்ளது. 

அதன்படி, அரசு மற்றும் டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்டவை டிடிஹெச் சேவை வழங்குவோரிடம் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் தேவையான மாற்றங்களை மேற்கொண்டு, ஊரடங்கு காலக்கட்டத்தில் சேவையை இலவசமாக வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இத்துடன் வீடியோ ஸ்டிரீமிங் வலைதளங்களும் தங்களது சேவையை ஊரடங்கு முடியும் வரை இலவசமாக வழங்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

விரும்பியவருடன் வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்வது, பொழுதுபோக்கிற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வீடியோ ஸ்டிரீமிங் வலைதளங்களை பார்ப்பதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் வெகுவாக குறைக்கப்படும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் சார்பில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் தங்கும் இடம் உள்ளிட்டவை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. எனினும், மக்களின் மனநிலையை சீராக வைத்துக் கொள்ள அரசு சார்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு போன்ற காலக்கட்டத்தில் மக்களுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம் ஆகும். குடும்பத்தார் மற்றும் நண்பர்களை பிரிந்து வாழ்வோருக்கு மன ரீதியில் அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட சிலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் அரங்கேறி இருப்பது மனுவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Similar News