செய்திகள்
அப்போ பிசிஒ இப்போ பிடிஒ - 2 ரூபாய்க்கு அதிவேக வைபை பயன்படுத்தலாம்
மத்திய டெலிகாம் துறை ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருக்கும் புதிய திட்டத்தில் பயனர்கள் ரூ.2 மட்டும் செலுத்தி அதிவேக வைபை பயன்படுத்த முடியும்.
புதுடெல்லி:
இந்தியாவில் முந்தைய காலங்களில் தொலைபேசி சேவையை வழங்க பிசிஒ-க்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த காலத்தில் வைபை சேவையை மேம்படுத்தும் நோக்கில் பிடிஒ என்ற பெயரில் புதிய சேவை துவங்கப்பட இருக்கிறது.
மத்திய டெலிகாம் துறை ஒழுங்குமுறை ஆணையம் பொது டேட்டா அலுவலக திட்டத்திற்கான முன்னுரையை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் இண்டர்நெட் கட்டணங்கள் அதிகபட்சம் 90% வரை குறைக்கப்பட இருக்கிறது.
பொது வைபை க்ரிட் அமைக்கும் டிராயின் புதிய திட்டம் நாடு முழுக்க இணைய சேவையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும். இந்த திட்டம் பிராட்பேண்ட் பயன்பாட்டிற்கு மாற்றாக இந்தியாவின் ஊரக பகுதிகளிலும் அதிவேக இணைய வசதியை வழங்கும். புதிய திட்டத்தின் கீழ் துவங்கும் டேட்டா தி்ட்டங்களின் விலை ரூ.2 முதல் துவங்குகிறது.
சேஷெட் வடிவில் கிடைக்கும் டேட்டா சலுகைகளை பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் வைபை மூலம் பயன்படுத்தலாம். சேவை வழங்குவது, பண பரிமாற்றம் மற்றும் சேவை உறுதி செய்வது போன்ற பணிகளின் போது பல்வேறு நிறுவனங்கள் ஒரே தளத்தின் கீழ் ஒன்றிணைய இருக்கின்றன.
கோப்பு படம்
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அங்கமாக பிராட்பேண்ட் சேவை இருக்கிறது. அந்த வகையில் புதிய சேவை வழங்க வைபை சிறப்பான வழிமுறை ஆகும். வைபை சேவை வழங்குவதற்கான உதிரி பாகங்கள் விலை குறைவு, இலவச ஸ்பெக்ட்ரெம் உள்ளிட்டவை இண்டர்நெட் விலையை குறைவாக வழங்க வழி செய்துள்ளது என டிராய் தலைவர் ஆர்.எஸ். ஷர்மா தெரிவித்துள்ளார்.
பிடிஒ-க்கள் சிறு நிறுவனங்களாகவோ அல்லது சிறு வணிகர்களாகவோ இருக்கலாம். இவர்கள் வைபை ஹாட்ஸ்பாட்களை இலவசமாகவோ அல்லது கட்டண அடிப்படையிலோ வழங்கலாம். புதிய திட்ட வடிவம் மந்திரி மனோஜ் சின்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் இந்த திட்டத்தின் முதற்கட்ட சோதனைகள் வெற்றி பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது வைபை சோதனை திட்டத்தில் பயனர்களுக்கு அதிவேக இணைய அனுபவம் கிடைக்கும். இந்த திட்டத்தில் டீ கடை, மளிகை கடை போன்ற சிறு சிறு இடங்களில் வைபை ஹாட்ஸ்பாட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிடிஒ-க்களை செட்டப் செய்வதற்கான பணிகளை உதிரி பாகங்களை தயாரிப்போர், இண்டர்நெட் சேவை வழங்குவோர் மேற்கொள்வர் என டிராய் தெ்ரிவித்துள்ளது.
பொது வைபை பயன்படுத்துவோர் மிக எளிமையாக நெட்வொர்க் கணி்டறிந்து ஒற்றை கிளிக் மூலம் இணைப்பை உறுதி செய்து, கட்டணம் செலுத்தி தங்களது சாதனங்களில் வைபை இணைத்து கொள்ள முடியும். இதேபோன்று பொது வைபை அமைக்க விரும்பும் சிறு வணிகர்களுக்கான செயல்திட்ட வடிவம் எளிமையாக இருக்கும் என டிராய் மேலும் தெரிவித்துள்ளது.