தமிழ்நாடு செய்திகள்

காவலர்களால் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - வேலியே பயிரை மேய்வதா? - நயினார் நாகேந்திரன் கண்டனம்

Published On 2025-10-01 02:30 IST   |   Update On 2025-10-01 02:30:00 IST
  • இச்சம்பவம் தமிழகத்தின் மீதான அழியா களங்கம்!
  • குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையினரே காமுகர்களாக உருமாறிவருவது நம்மை பயமுறுத்துகிறது.

திருவண்ணாமலையில் இளம்பெண்ணை 2 காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட கண்டன பதிவில்,

திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் புறவழிப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இருவர், ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

ஆளும் திமுக ஆட்சியில் தமிழகப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை, பிற மாநிலப் பெண்களும் இதில் விதிவிலக்கல்ல என்பதை மீண்டுமொரு முறை உணர்த்தும் இச்சம்பவம் தமிழகத்தின் மீதான அழியா களங்கம்!

திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் பெருகிவரும் பெண்களுக்கெதிரான பாலியல் தொல்லைகள் ஒருபுறம் நம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றன.

குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையினரே காமுகர்களாக உருமாறிவருவது மறுபுறம் நம்மை பயமுறுத்துகிறது. இப்படி மக்களைப் பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா?

முதல்வர் திரு. ஸ்டாலின். அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையில் இத்தனை ஒழுங்கீனங்களை வைத்துக்கொண்டு, வெற்று விளம்பரங்களில் மட்டுமே வீண் கவனம் செலுத்தும் இந்த விடியா அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News