தமிழ்நாடு செய்திகள்

ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 23-ந்தேதி தொடங்குகிறது

Published On 2025-05-14 15:05 IST   |   Update On 2025-05-14 15:05:00 IST
  • சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர்கள் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்படவுள்ளது.
  • கோடைவிழா நடைபெறும் அனைத்து நாள்களிலும் இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

சேலம்:

ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பிருந்தாதேவி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடைவிழா மற்றும் மலர்க்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு 48-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்காட்சி வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந்தேதி (வியாழக்கிழமை) வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.

சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் இக்கோடை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோடை விழா மலர் கண்காட்சி தொடக்க விழாவில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் 1.50 லட்சம் மலர்களை கொண்டு மலர்க்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் அமைக்கப்பட உள்ளது. வன விலங்குகளின் வடிவமைப்புகள், மேட்டூர் அணை உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் வண்ண மலர்களைக் கொண்டு அமைக்கப்பட உள்ளது.

சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர்கள் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்படவுள்ளது. அதேபோன்று, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட வுள்ளன.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்ல பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி, கலைப்பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஒருங்கிணைந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

கோடைவிழா நடைபெறும் அனைத்து நாள்களிலும் இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இளைஞர்களுக்கான கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கபடி, கயிறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஏற்காடு கோடை விழாவையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்புப் பஸ்கள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News