தமிழ்நாடு செய்திகள்

ஓடும் அரசு பஸ்சில் இருக்கை உடைந்து சாலையில் விழுந்த பெண்

Published On 2024-11-23 08:05 IST   |   Update On 2024-11-23 08:05:00 IST
  • திடீரென தையல்நாயகி அமர்ந்திருந்த இருக்கை உடைந்து விழுந்தது.
  • பயணிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர்.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டையில் இருந்து நேற்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டது.

குமராட்சியை சேர்ந்த ஹரிதரன் (வயது 60) என்பவர் பஸ்சை ஓட்டினார். சிதம்பரம் அருகே வேலக்குடியை சேர்ந்த அருள்மணி என்பவர் கண்டக்டர் பணியில் இருந்தார்.

இந்த பஸ் புதுக்குப்பம் கிராமத்தில் உள்ள நிறுத்தத்திற்கு காலை 7.30 மணி அளவில் வந்தபோது, அதே கிராமத்தை சேர்ந்த சந்திரன் மனைவி தையல்நாயகி (52) என்பவர் பஸ்சில் ஏறி, பின்பக்க இருக்கையில் அமர்ந்துள்ளார். பின்னர் பஸ் புறப்பட்டு, புதுப்பேட்டை அருகில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென தையல்நாயகி அமர்ந்திருந்த இருக்கை உடைந்து விழுந்தது.

இதில் நிலை தடுமாறிய தையல்நாயகி பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வழியாக சாலையில் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு உடனே, ஹரிதரன் பஸ்சை நிறுத்தினார். விபத்தில் தையல் நாயகியின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர், பயணிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News