தாளவாடி அருகே 12 மணி நேரமாக வனத்துறையினர்- கிராம மக்களை அலறவிட்ட யானை கூட்டங்கள்
- தாளவாடி வனத்துறையினர் கரும்பு காட்டுக்குள் புகுந்த மூன்று யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
- கரும்பு தோட்டத்தை சுற்றி சுற்றி அந்த மூன்று யானைகளும் ஓடி வந்தன.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, போன்ற வ னவிலங்குகள் வசித்து வருகின்றன.
சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட மரூர் செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள அந்தோணி என்பவரது கரும்பு தோட்டத்தில் 3 யானைகள் புகுந்தது. பட்டப்பகலில் யானைகள் கரும்பு தோட்டத்தில் புகுந்ததால் விவசாய கூலி தொழில் பணிகள் செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் இதுபற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தாளவாடி வனத்துறையினர் கரும்பு காட்டுக்குள் புகுந்த மூன்று யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் 3 யானைகளும் கரும்பு காட்டை விட்டு வெளியே செல்லாமல் தொடர்ந்து கரும்பு காட்டுக்குள் உலா வந்தது. கரும்பு பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது. யானைகளை பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டனர்.
ஆனாலும் யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி கரும்பு காட்டுக்குள்ளேயே பதுங்கிக் கொண்டது. கரும்பு தோட்டத்தை சுற்றி சுற்றி அந்த மூன்று யானைகளும் ஓடி வந்தன.
பொதுமக்களும் வனத்துறையினரும் இணைந்து தோட்டத்தில் பதுங்கி இருக்கும் யானையை விரட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். ஒருபுறம் வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். மறுபுறம் பொதுமக்கள் சத்தங்களை எழுப்பியும், பட்டாசுகளை வெடித்தும் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஒரு வழியாக இரவு 11 மணி அளவில் அந்த மூன்று யானைகளும் கரும்பு தோட்டத்தில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றன. கிட்டத்தட்ட 12 மணி நேரமாக வனத்துறையினரையும், பொதுமக்களையும் அந்த மூன்று காட்டு யானைகளும் அலறவிட்டன.
எனினும் வனப்பகுதியில் இருந்து எந்நேரமும் மீண்டும் அந்த யானை கூட்டம் தோட்டத்துக்குள் வர வாய்ப்பு உள்ளதால் வனத்துறையினர் அந்த பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.