தமிழ்நாடு செய்திகள்

குட்டியின் பசி போக்க மரத்தில் ஏறி பலாப்பழம் பறித்த காட்டு யானை

Published On 2025-07-26 09:56 IST   |   Update On 2025-07-26 09:56:00 IST
  • தேயிலை தோட்ட குடியிருப்பு ஒன்றின் அருகே பலா மரத்தில் பலாப்பழம் தொங்குவதை கண்ட யானை அதன் அருகே சென்றது.
  • மரத்தின் மீது தனது முன்னங்கால்களை வைத்து துதிக்கையால் மரக்கிளையில் தொங்கிய பலாப்பழத்தை லாவகமாக பறித்தது.

வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியில் 12-க்கும் மேற்பட்ட யானை கூட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி திரிகின்றன.

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முடீஸ், பன்னிமேடு, பெரிய கல்லார், யானைமுடி, தோணிமுடி, கஜமுடி, இஞ்சிப்பாறை, வில்லோனி, சேக்கல்முடி ஆகிய தேயிலை எஸ்டேட்டுகளை சுற்றி அமைந்துள்ள அடர் வனப்பகுதிகளில் குட்டிகளுடன் வசிக்கும் காட்டு யானை கூட்டம் பருவமழை காலங்களின் போது வழக்கமான வலசை பாதை வழியே ஒரு வனப்பகுதியில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு கூட்டம், கூட்டமாக இடம் பெயர்வது வழக்கம்.

தொடர் மழையால் வனப்பகுதிகளில் உள்ள இலை, தழை, புற்கள் அழுகி விடுவதால் அவை மாற்று உணவு தேடி இடம் பெயர தொடங்குகின்றன.

ஒரே வகையான உணவுகளை உண்பதால் குடற்புழு உள்ளிட்ட நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாத்து கொள்ளும் பொருட்டு மாற்று உணவை தேடி காடுகளை விட்டு சமவெளி பகுதியை கடந்து செல்கிறது.

இதேபோன்று வலசை பாதைகளில் பயணிக்கும் யானைகள் தங்களுக்கு பிடித்தமான மாற்று உணவினை கண்டுவிட்டால் அவற்றை ருசி பார்க்க தவறுவதில்லை.

நேற்றுமுன்தினம் மாலை முடீஸ் பகுதியில் குட்டியுடன் ஒரு காட்டு யானை சுற்றியது. தேயிலை தோட்ட குடியிருப்பு ஒன்றின் அருகே பலா மரத்தில் பலாப்பழம் தொங்குவதை கண்ட யானை அதன் அருகே சென்றது.

பின்னர் மரத்தின் மீது தனது முன்னங்கால்களை வைத்து துதிக்கையால் மரக்கிளையில் தொங்கிய பலாப்பழத்தை லாவகமாக பறித்தது.

தொடர்ந்து கால்களால் அந்த பழத்தை இரண்டாக பிளந்து அதில் இருந்த பலாச்சுளைகளை எடுத்து தனது குட்டிக்கு கொடுத்து, தானும் உண்டு மகிழ்ந்தது. இந்த காட்சியை அருகே தேயிலை தோட்டத்தில் பணியில் இருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. 

Tags:    

Similar News