தமிழ்நாடு செய்திகள்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையில் தாமதம் ஏன்?

Published On 2025-06-23 08:05 IST   |   Update On 2025-06-23 08:05:00 IST
  • தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந் தேதி அரங்கேறியது.
  • இதுபோன்ற வழக்குகளில் ஒரே நீதிபதி மூலம் விசாரணையை மேற்கொண்டால் தான் விரைவில் நீதி கிடைக்கும்.

சென்னை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகிய 2 பேர் போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர்.

தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந் தேதி அரங்கேறியது.

இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. 105 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ., துரிதமாக செயல்பட்டு 3 மாதத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு விசாரணை மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கின் விசாரணை முடிவடையாதது ஜெயராஜ்-பெனிக்ஸ் குடும்பத்தினரிடம் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஜெயராஜ்-பெனிக்ஸ் குடும்பத்தினர் தரப்பில் ஆஜராகி வரும் வக்கீல்கள் கூறியதாவது:-

இந்த வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என மதுரை கோர்ட்டுக்கு 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

ஒவ்வொரு முறையும் சி.பி.ஐ. தரப்பில் காலஅவகாசம் கோரப்பட்ட நிலையில், கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கிளை, 3 மாதத்துக்குள் வழக்கை விசாரித்து முடிக்க மதுரை கோர்ட்டுக்கு உத்தரவிட்டு உள்ளது.

இதுவரை இந்த வழக்கை 4 நீதிபதிகள் விசாரித்து உள்ளனர். தற்போது 5-வது நீதிபதி இந்த வழக்கை விசாரித்து வருகிறார். தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி, ஜெயராஜ்-பெனிக்ஸ் கொலை வழக்கை விசாரித்து வரும் கோர்ட்டுக்கு பொறுப்பு நீதிபதியாகவே இருந்து வருகிறார்.

இது ஒரு முக்கியமான வழக்கு. இதுபோன்ற வழக்குகளில் ஒரே நீதிபதி மூலம் விசாரணையை மேற்கொண்டால் தான் விரைவில் நீதி கிடைக்கும்.

ஆனாலும், இதை ஒரு உரிமையாக கோர முடியாது என்பதால் எங்களால் இந்த விவகாரத்தில் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

அதேவேளையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேருக்கும் தனித்தனியாக 9 வக்கீல்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 9 பேரும் தனித்தனியாக சி.பி.ஐ. தரப்பு சாட்சிகள் 105 பேரிடமும் குறுக்கு விசாரணை மேற்கொள்வதால் மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது.

இது, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான உரிமை. இதை எந்தவிதத்திலும் தடுக்க முடியாது. அதேவேளையில் இதை விரைந்து முடிக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை.

இந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் செயல்படுவதும் தெரிகிறது. அவ்வாறு செயல்படுவதையும் நீதிமன்றம் கண்டறிந்து தடுக்க வேண்டும்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும். இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நிரந்தர நீதிபதியை நியமித்து வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

இவ்வாறு வக்கீல்கள் கூறினர்.

பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் விரைந்து தீர்ப்பு வழங்கி வரும் நிலையில் ஜெயராஜ்-பெனிக்ஸ் கொலை வழக்கின் தீர்ப்பையும் விரைந்து வழங்க வேண்டும் என்பது அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News