யார் இந்த சட்டம் ஒழுங்கு டிஜிபி வெங்கடராமன்?
- மத்திய அரசு பணியிலும் 8 ஆண்டுகள் இருந்துள்ளார்.
- காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி சைலேஷ் குமார் யாதவும் ஓய்வு பெறுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
சென்னை:
தமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக உள்ள சங்கர் ஜிவால் வருகிற 31-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
இதையொட்டி இன்று மாலையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அவருக்கு பணி நிறைவு விழா நடத்தப்படுகிறது. சங்கர் ஜிவாலுடன், காவல் துறை வீட்டு வசதி நிறுவன இயக்குனர் உள்ள டி.ஜி.பி. சைலேஸ் குமார் யாதவும் ஓய்வு பெறுகிறார்.
இதைத் தொடர்ந்து இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விழாவில் தமிழக காவல் துறையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சங்கர் ஜிவால், சைலேஸ் குமார் யாதவ் ஆகிய இருவரையும் வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறார்கள்.
டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் சட்டம்-ஒழுங்கு பதவியில் டி.ஜி.பி.யாக பணி அமர்த்தப்பட்டார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த போது தான் டி.ஜி.பி. அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால் 1990-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர் சில ஆண்டுகள் முன்னணி நிறுவனங்களில் என்ஜினீயராகவும் பணி புரிந்துள்ளார். அதன் பிறகே ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார். மதுரை மற்றும் சேலத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து உள்ள சங்கர் ஜிவால், திருச்சி கமிஷனராகவும், உளவு பிரிவில் ஐ.ஜி.யாகவும் பணியாற்றி உள்ளார். மத்திய அரசு பணியிலும் 8 ஆண்டுகள் இருந்துள்ளார். சிறப்பான பணிக்காக 2 முறை ஜனாதிபதி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை மறுநாள் ஓய்வு பெற உள்ள போலீஸ் டி.ஜி.பி சங்கர் ஜிவால் சந்தித்து பேசினார். அதேபோல் பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட உள்ள வெங்கடராமனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். மேலும் காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி சைலேஷ் குமார் யாதவும் ஓய்வு பெறுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட உள்ள வெங்கடராமன் குறித்த தகவல்கள்...
* 1968-ம் ஆண்டு மே 8-ந்தேதி நாகப்பட்டினத்தில் பிறந்தார்.
* யு.பி.எஸ்.சி. தேர்வில் 1994-ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* இளங்கலை பொருளாதாரம்; பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை படிப்புகளில் முதுகலைப் பட்டம்.
* நிர்வாகப் பிரிவு ஐஜியாக இருந்தபோது, காவல்துறையில் காகிதமில்லாப் பணியை நடைமுறைப்படுத்தினார்.
* ஏடிஜிபியாக சிபிசிஐடி மற்றும் சைபர் கிரைம் பிரிவுகளில் முக்கியமான வழக்குகளை வெற்றிகரமாகக் கையாண்டவர்.
* கடந்த டிசம்பர் மாதம் டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றார்.
* தற்போது சட்டம்-ஒழுங்குப் பிரிவுக்கான கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
* சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்புடன், படைத் தலைவர் பொறுப்பையும் கவனிக்க உள்ளார்.