கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்திற்கு காரணம் யார்? - வெளியான அதிர்ச்சி தகவல்
- ரெயில் மோதியதில் வேனில் இருந்த பள்ளிக் குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர்.
- விபத்து நிகழ்ந்த இடத்தில் எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற ஆச்சாரியா என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வேன் மீது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரெயில் மோதியதில் வேனில் இருந்த பள்ளிக் குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர்.
ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர்.
இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, வேனில் 5 பேர் பயணித்ததாகவும், விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரெயில் மோதியதில் ஆச்சாரியா பள்ளி வேனில் இருந்த மாணவர்களின் புத்தகப்பைகள் தண்டவாளத்தில் சிதறிக்கிடந்ததை காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.