மதுரை கள்ளழகர் திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு
- கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது.
- வைகை அணையில் இருந்து 216 மி.கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆண்டிபட்டி:
மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக வைகை அணையில் இருந்து முன்கூட்டியே மதுரையைச் சென்று சேரும் வகையில் தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி இன்று மாலை 6 மணி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையில் இருந்து 216 மி.கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று மாலை 1000 கன அடி வீதம் தண்ணீர் ஆற்றின் வழியே திறக்கப்படும். அணையில் இருந்து வெளியேறும் நீர் படிப்படியாக குறைக்கப்பட்டு மே 12-ந் தேதி காலை 6 மணிக்கு நிறுத்தப்படும். ஆற்றின் வழியாக தண்ணீர் செல்வதால் கரையோர பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 55.27 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 25 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2762 மி.கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.35 அடியாக உள்ளது. வரத்து 197 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 1618 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 37.50 அடியாக உள்ளது. வரத்து 68 கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
ஆண்டிபட்டி 13.6, வீரபாண்டி 26.8, பெரியகுளம் 58, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 5, வைகை அணை 46.8, கூடலூர் 11.6, பெரியாறு அணை 14.8, தேக்கடி 18.2, சண்முகா நதி அணை 7.4, அரண்மனைபுதூர் 2.2, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.