மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு
- மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மாவட்டத்தில் புறநகர் மற்றும் மாநகர பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனே இருக்கிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்ததால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மழை குறைந்து விட்டதால் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 134½ அடியாக உள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 137½ அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 1308 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 2100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை பகுதிகளில் மழை பெய்யவில்லை. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 107½ அடியாக உள்ளது.
கடந்த ஆண்டு இதேநாளில் மணிமுத்தாறு அணையில் 80 அடியும், பாபநாசத்தில் 88½ அடியும், சேர்வலாறு அணையில் 88 அடியும் நீர் இருப்பு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்தே கனமழை கொட்டித்தீர்த்ததால் அணைகள் நீர் இருப்பு முழு கொள்ளளவை எட்டிடும் நிலையில் இருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை சுற்றுவட்டார எஸ்டேட்டுகளில் கடந்த 3 நாட்களாக மழை குறைந்துவிட்ட நிலையிலும் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாகவே இருக்கிறது.
இதனால் மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அருவியினை பார்வையிடுவதற்கு மட்டும் விரும்புபவர்களுக்கு பார்வையிட அனுமதி வழங்கப்படும் எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல் பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அகஸ்தியர் அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அகஸ்தியர் அருவிக்கு செல்லும் பாதை நீரில் மூழ்கியுள்ளது. இதையடுத்து அகஸ்தியர் அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சொரிமுத்து அய்யனார் கோவில் செல்லும் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகின்றனர்.
மாவட்டத்தில் புறநகர் மற்றும் மாநகர பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனே இருக்கிறது. இதனால் கேரளாவில் நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் மழை இல்லை. இன்று காலையில் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இல்லாத நிலையில், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம், சாத்தான்குளம், சூரன்குடி சுற்றுவட்டாரங்களில் சாரல் மழை பெய்தது. இன்று காலை முதலே மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டமாக இருக்கிறது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.