வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
- வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததன் காரணமாக கடந்த மாதம் 27-ந் தேதி 70 அடிக்கும் மேல் உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போது மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 67.91 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 1810 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக கால்வாய் மற்றும் ஆற்றின் வழியாக 2609 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
இதனால் வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அணையின் நீர் இருப்பு 5299 மி.கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக குமுளி, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 134.20 அடியாக உள்ளது. வரத்து 1184 கன அடி. திறப்பு 1723 கன அடி. நீர் இருப்பு 5680 மி.கன அடியாக உள்ளது.
மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.