தமிழ்நாடு செய்திகள்

விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2025-06-30 12:01 IST   |   Update On 2025-06-30 12:01:00 IST
  • போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
  • குடிநீர் வழங்காத பட்சத்தில் சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

விருத்தாசலம்:

விருத்தாசலம் அடுத்த எருமனூர் ஊராட்சியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக குடிநீருடன் உப்பு கலந்த தண்ணீர் வருவதால் குடிப்பதற்கோ, சமையலுகோ பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஒரு வார காலமாக முற்றிலும் குடிநீர் வழங்கப்படாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் விருத்தாசலம்-முகாசாபரூர் சாலையில் இன்று காலை திடீரென மறியல் போாரட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி குடிநீர் வழங்காத பட்சத்தில் சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைதொடர்ந்து போலீசார் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கிராமத்திற்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் கிராம மக்கள் சாலை மறியலை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த மறியல் போராட்டத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

Tags:    

Similar News