தமிழ்நாடு செய்திகள்

பவானிசாகர் அருகே இன்று காலை குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2025-07-01 11:02 IST   |   Update On 2025-07-01 11:02:00 IST
  • மக்கள் காலி குடங்களுடன் இன்று காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர், ஜீவா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கே குடிநீர் குழாய் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீப காலமாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மக்கள் காலி குடங்களுடன் புளியம்பட்டி ரோடு அண்ணா நகர் பஸ் நிறுத்தம் இன்று காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உங்கள் பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து களைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News