2ம் இடம் யாருக்கு என்பதில் தான் விஜய்க்கும் இபிஎஸ்-க்கும் போட்டி - திருமாவளவன்
- எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுகவிற்கு சவால் விடுகிறார் விஜய்
- திமுகவுடன் விஜய் மோதவில்லை, இபிஎஸ் உடன் விஜய் மோதுகிறார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க.தான். இதில் வேடிக்கை என்ன என்றால், அடுத்து நாங்கள் தான் ஆளுங்கட்சி, ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தார் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.
இன்றைக்கு ஒருவருக்கு பதில் சொல்வதற்காக அவர் ஒரு பேட்டி தந்திருக்கிறார், நாங்கள்தான் அடுத்த எதிர்க்கட்சி என்று. எனவே, ஆளுங்கட்சி, ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர், எதிர்க்கட்சி என்று சொல்லும் நிலைக்கு இன்றைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை.
எனவே, இப்போது இரண்டாவது இடத்திற்கு யார் வருவது என்றுதான் அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை, நாம்தான் எப்போதும் முதல் இடத்திற்கு வரப்போகிறோம். நாம்தான் ஆளுங்கட்சி. நான் ஏதோ, மமதையில் அகங்காரத்தில் சொல்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். மக்களிடத்தில் இருக்கும் ஆதரவு மக்கள் நம்மை வரவேற்கும் காட்சியை வைத்து நான் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.
திமுக Vs தவெக என விஜய் பேசியதை மறைமுகமாக சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஜயின் பேச்சை சுட்டிக்காட்டி விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் பேசிய திருமாவளவன் கூறியதாவது:-
* தேர்தலிலேயே நிற்காத ஒருவரை தலையில் தூக்கி வைத்து வருகிறார்கள். அவர் தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்.
* எதோ ஒரு தனியார் சர்வேயில் அவர் 2ம் இடம் பிடித்துவிட்டாராம். அடுத்து அவர் தான் ஆட்சியை பிடிக்க போகிறாராம். பாவம் அவரை உசுப்பி விடுகிறார்கள்.
* அவர் சொல்கிறார், 2026 தேர்தலில் 2 பேருக்கு மட்டும் தான் போட்டி. ஒருபக்கம் DMK இன்னொரு பக்கம் TVK.
* அதிமுகவை விட தவெக பெரிய சக்தி என சவால் விடுகிறார் விஜய். எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுகவிற்கு சவால் விடுகிறார் விஜய்
* 2ம் இடம் யாருக்கு என்பதில் தான் விஜய்க்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் போட்டி, 2ம் இடம் யார் என்பதில் தான் அண்ணாமலைக்கு விஜய்க்கும் போட்டி.
* திமுகவுடன் விஜய் மோதவில்லை, இபிஎஸ் உடன் விஜய் மோதுகிறார்