தமிழக சட்டம்- ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமனம்
- டிஜிபி அலுவலகத்தில் வைத்து முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொள்கிறார்.
- மதுரையில் சட்டம் ஒழுங்கு பிரிவில் துணை ஆணையராகவும், மத்திய புலனாய்வு பிரிவிலும் பணிபுரிந்துள்ளார்.
சென்னை:
தமிழக சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமனை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி புதிய டிஜிபியாக நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்து வந்த டிஜிபி வெங்கட்ராமனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று அவர் டிஜிபி அலுவலகத்தில் வைத்து முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொள்கிறார். ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.
1994 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த வெங்கட்ராமன் பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியிருக்கிறார். மதுரையில் சட்டம் ஒழுங்கு பிரிவில் துணை ஆணையராகவும், மத்திய புலனாய்வு பிரிவிலும் பணிபுரிந்துள்ளார்.
சேலம் சரக டிஐஜியாகவும் குற்றப்பிரிவு பெற்ற புலனாய்வு துறையிலும் பணியாற்றியுள்ள வெங்கட்ராமன் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஐ.ஜி.யாகவும் இருந்துள்ளார். கூடுதல் போலீஸ் டிஜிபியாக சைபர் கிரைம் குற்ற பிரிவிலும், சிபிசிஐடி பிரிவிலும் பணியாற்றிய வெங்கட்ராமன் தற்போது நிர்வாகப் பிரிவு டிஜிபியாக பணிபுரிந்து வந்த நிலையில்தான் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் இன்று நடைபெறும் விழாவில் உயர் போலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.