தமிழ்நாடு செய்திகள்

மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல தடை

Published On 2025-03-29 10:51 IST   |   Update On 2025-03-29 10:51:00 IST
  • யாகசாலை அமைப்பது, வர்ணம்பூசும் பணிகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகின்றன.
  • மருதமலை முருகன் கோவிலில் 1-ந்தேதி முதல் யாகசாலையில் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வடவள்ளி:

கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

மருதமலை முருகன் கோவிலில் வருகிற 4-ந்தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதனையொட்டி கோவிலில் கும்பாபிஷேக விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. யாகசாலை அமைப்பது, வர்ணம்பூசும் பணிகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகின்றன.

மேலும் அமைச்சர், கலெக்டர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அறங்காவலர் குழுவினர் கும்பாபிஷேக அழைப்பிதழையும் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் மருதமலை முருகன் கோவிலில் 1-ந்தேதி முதல் யாகசாலையில் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 1-ந்தேதி மாலை 5 மணிக்கு மேல் கோவிலில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில் சக்தி கலசங்களை வைத்து பூஜை செய்யப்பட உள்ளது. இதனால் அன்றைய தினம் மாலை 5 மணி முதல் 3-ந்தேதி வரை பக்தர்கள் அனைவரும் யாகசாலையில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களை யாக சாலையில் தரிசனம் செய்யலாம்.

ஏப்ரல் 4-ந்தேதி கும்பாபிஷேக விழா முடிந்ததும் மீண்டும் வழக்கமான நடைமுறையில், பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு சன்னதிகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வருகிற 4-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை 3 நாட்கள் மலை மீது இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை.

பக்தர்கள் படிக்கட்டு வழியாகவும், கோவில் பஸ்கள் மூலமாகவும் மலைக்கோவிலுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News